UPI 123Pay: இந்தியா முழுவதும் தற்போது யுபிஐ (UPI) சேவையை மக்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி நொடிப் பொழுதில் பணம் அனுப்ப முடிகிறது. அதேபோல் இந்த யுபிஐ செயலிகளில் அவ்வப்போது புதிய வசதிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவரப்படுவதால், இதனைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தான், எந்தவித இண்டர்நெட் வசதியும் (Internet connection) இல்லாமல் நேரடியாகப் பணம் அனுப்பும் அட்டகாசமான புதிய சேவையை முன்னணி நிறுவனமான போன்பே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஃபீச்சர் போன் (Feature phone) எனப்படும் சாதாரண பட்டன் போன் பயன்படுத்தும் நபர்களும் இனி சுலபமாகப் பணம் அனுப்பும் வகையில் போன்பே யுபிஐ 123பே (PhonePe UPI 123Pay) என்ற புதிய சேவையை போன்பே கொண்டுவந்துள்ளது.
PhonePe UPI 123Pay Technology
போன்பே யுபிஐ 123பே தொழில்நுட்பம்: இந்தியாவில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் இப்போதும் சாதாரண மாடல் மொபைல் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த பாமர மக்களுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண மொபைல்களுக்கு யுபிஐ சேவையை வழங்கிய முதல் பெரிய மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர் (Third-party app provider) என்ற பெருமையை போன்பே தட்டிச் சென்றுள்ளது.
அதுவும் போன்பே உருவாக்கியுள்ள பிரத்யேக தொழில்நுட்பத்தின் கீழ் இது இயங்குகிறது. குறிப்பாக 2ஜி இணைய வசதி (2G network) கூட சரியாகக் கிடைக்காத குக்கிராமங்களிலும் எவ்விதத் தடையுமின்றி பணம் அனுப்பும் வகையில் எஸ்எம்எஸ் தொழில்நுட்பம் (SMS-based technology) இதில் நேர்த்தியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: Samsung Galaxy S27 Ultra: பின்பக்க டிஸ்பிளேவுடன் மாஸ் லீக்!
PhonePe UPI 123Pay Phone Support
போன்பே யுபிஐ 123பே மொபைல் சப்போர்ட்: சாதாரண போன் வைத்திருப்பவர்கள் இந்த வசதியை மிக எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள நோக்கியா (Nokia), எச்எம்டி (HMD), லாவா (Lava), ஐடெல் (itel) போன்ற பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் (Mobile manufacturers) போன்பே கைகோர்த்துள்ளது.
இதனால் இந்நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய போன்களிலேயே இந்த போன்பே சேவை முன்கூட்டியே நிறுவப்பட்டு (Pre-installed application) கடைகளில் விற்பனைக்கு வரும். எனவே பயனர்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் வாங்கிய உடனேயே பரிவர்த்தனைகளைத் தொடங்க முடியும்.
இதையும் படியுங்கள்: Realme C100i: ரூ.15,000 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே
PhonePe UPI 123Pay Features
போன்பே யுபிஐ 123பே சிறப்பம்சங்கள்: இந்த வசதி மூலம் பயனர்கள் தங்களது நண்பர்களுக்கு மொபைல் எண் வழியாக நேரடியாகப் பணம் அனுப்பலாம். கடைகள் மற்றும் வியாபாரிகளுக்குப் பணம் செலுத்தலாம். கேமரா வசதி கொண்ட ஃபீச்சர் போன்களில் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் வசதியும் (QR code scan payment) இதில் உள்ளது.
மேலும் வங்கி கணக்கு விவரங்களை நிர்வகிப்பது, பேலன்ஸ் சரிபார்ப்பது (Check bank balance) மற்றும் பரிவர்த்தனை வரலாற்றை (Transaction history) நொடியில் பார்ப்பது போன்ற அனைத்து முக்கிய வேலைகளையும் இந்த சாதாரண போனிலேயே செய்து முடிக்கலாம்.
PhonePe UPI 123Pay AI Voice Support
போன்பே யுபிஐ 123பே ஏஐ வாய்ஸ் சப்போர்ட்: புதிய பயனர்களுக்கு வழிகாட்ட ஆங்கிலம் மற்றும் 12 இந்திய மொழிகளில் செயல்படும் அதிநவீன ஏஐ குரல் உதவி மையத்தையும் (AI voice assistant) போன்பே இணைத்துள்ளது.
எதிர்காலத்தில் மின் கட்டணம் செலுத்துதல் (Electricity bill payment), மொபைல் ரீசார்ஜ் (Mobile recharge) மற்றும் ஆதார் அடிப்படையிலான பதிவு போன்ற பயனுள்ள கூடுதல் வசதிகளும் இதில் சேர்க்கப்பட உள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாத சாமானிய மக்களுக்கும் இந்த புதிய அம்சம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

