Ration Card Name Removal: மக்களுக்குக் குறைந்த விலையிலும் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்காகவே ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. கார்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அதற்கு ஏற்பவே அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் அளவும் கூடும் அல்லது குறையும். அதனால்தான் குடும்பத்தில் நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப ரேஷன் கார்டை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது.
பொதுவாகக் குடும்பத்தில் புதிய குழந்தை பிறந்தால் பெயர் சேர்ப்போம்; அதேபோல் சில சூழ்நிலைகளில் பெயரை நீக்க வேண்டிய நிலையும் வரும். உதாரணமாக, வீட்டுப் பெண் திருமணமான பிறகு கணவர் வீட்டு ரேஷன் கார்டில் சேர வேண்டுமென்றால், தாய் வீட்டு கார்டில் இருந்து பெயரை எடுக்க வேண்டும். அதேபோல் குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டாலும் அவர்களது பெயரை கார்டில் இருந்து நீக்குவது மிக முக்கியமாகும்.
Ration Card Name Removal Importance
ரேஷன் கார்டு பெயர் நீக்கம் முக்கியத்துவம்: குடும்பத்தில் மாற்றம் நடந்த பிறகும் குறிப்பிட்ட நபரின் பெயரை நீக்காமல் அப்படியே விட்டால் தேவையில்லாத சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக அரசு தரும் நலத்திட்டங்கள் மற்றும் நிவாரண உதவிகள் தவறான வழியில் சென்றுவிடாமல் தடுக்கவே இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், திருமணமான பெண் தனது கணவர் குடும்பத்தின் ஸ்மார்ட் கார்டில் பெயரை இணைக்க வேண்டும் என்றால், அதற்குப் பழைய கார்டில் பெயர் நீக்கப்பட்டதற்கான சான்றிதழ் (Name Removal Certificate) கட்டாயம் தேவைப்படும். அந்தச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே புதிய இடத்தில் எந்தக் குழப்பமும் இல்லாமல் எளிதாகப் பெயரைச் சேர்க்க முடியும்.
இதையும் படியுங்கள்: BSNL SIM? வச்சிருக்கீங்களா? 150 நாட்கள் ரீசார்ஜ் கவலையே இல்ல.. தினமும் 3GB டேட்டா!
Ration Card Online Name Removal
ரேஷன் கார்டு ஆன்லைனில் பெயர் நீக்கும் முறை: இதற்காக நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை; வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் சில நிமிடங்களில் பெயரை நீக்கிவிடலாம். தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று (TNPDS Portal), ரேஷன் கார்டில் பதிவான மொபைல் எண்ணை உள்ளிட்டு வரும் ஓடிபி (OTP) மூலமாக லாகின் செய்து கொள்ளவும்.
உள்ளே சென்றதும் திரையில் தெரியும் 'உறுப்பினர் நீக்கம்' (Remove Family Member) என்ற பகுதியைத் தேர்வு செய்து, யாருடைய பெயரை எடுக்க வேண்டுமோ அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் எதற்காக நீக்குகிறீர்கள் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, அதற்குரிய சான்றிதழைப் படம் எடுத்துப் பதிவேற்றி சமர்ப்பித்தால் போதும்; அதிகாரிகள் சரிபார்த்துவிட்டுப் பெயரை நீக்கிவிடுவார்கள்.
Ration Card Offline Process
ரேஷன் கார்டு ஆஃப்லைன் விண்ணப்ப முறை: ஆன்லைனில் செய்யத் தெரியாதவர்கள் அல்லது செல்போன் வசதி இல்லாதவர்கள் நேராகச் சென்றும் விண்ணப்பிக்கலாம். உங்கள் ஊரில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு (Taluk Supply Office) நேரடியாகச் சென்று, பெயர் நீக்கம் செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தைக் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
படிவத்தைப் பூர்த்தி செய்து, இறப்பு என்றால் இறப்புச் சான்றிதழ் (Death Certificate) நகலையோ அல்லது திருமணம் என்றால் திருமணப் பத்திரிகையையோ ஆதாரமாக இணைத்துக் கொடுக்க வேண்டும். அதிகாரிகள் உங்கள் ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு, அரசு பதிவேட்டில் இருந்து அந்தப் பெயரை உடனடியாக நீக்கிவிடுவார்கள்.
